Sunday, December 14, 2008

M.R.இராதாவின் மலேசிய உரை பாகம் - 1 & 2



நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் மலேசிய உரையை இத்துடன் இணைத்துள்ளேன். கேளுங்கள்... வார்த்தை வீச்சுக்களை மதிப்பிடுங்கள். இன்றும் கூட அவருக்கான தளமான, திரைப்பட மற்றும் நாடகத்துறையில் அவர் விட்டுச் சென்ற இடமானது நிரப்பப்பட முடியாமலே உள்ளது.




Wednesday, November 26, 2008

தமிழில் நீளமான 'பாலிண்ட்ரோம்'(Palindrome)

முதலில் 'பாலிண்ட்ரோம்' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி விடுகின்றேன். வலம் இடமாக அல்லது இடம் வலமாக எந்த திசையில் (முன்னாகவும் பின்னாகவும்) வாசித்தாலும் ஒரே வடிவம் மற்றும் பொருள் தரும் வார்த்தை அல்லது வாக்கியம். இதற்கு சரியான தமிழ்ச்சொல் மறந்துவிட்டேன்(கண்டிப்பாக விரைவில் கூறிவிடுகின்றேன். யாருக்காவது தெரிந்தாலும் கூறலாம்).


நண்பர் சந்திரமௌளீ(நன்றி) அவர்களின் உதவியால் மேற்கண்ட ஐயம் தெளிந்தது.

இதன் தமிழ் வடிவம் "மாலை மாற்று" .


சிறு உதாரணங்கள் -
'மாலா போலாமா?'
'தேரு வருதே'

தமிழின் நீளமான இவ்வகை அமைப்பு-
'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா' - திருஞான சம்பந்தரின் மாலை மாற்றுப் பதிகத்திலிருந்து.

இதன் பொருள் - 'சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருத்தமா? நீ ஒருவனே கடவுள் என்றால். பொருந்தும். ஆம் ஆம்!'

- மூலம்- அமரர் 'சுஜாதா' வின் 'கற்றதும்... பெற்றதும்...'

Tuesday, November 25, 2008

மதி, சதி வெல்லும்(சிறார் கதைப்பகுதி)






கருப்பன், வெள்ளையன் இருவரும் அறிவூரைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தில் வணிகர்களாக வாழ்பவர்கள். இருவருமே வெவ்வேறு பண்டங்களை விற்பனை செய்து வருவதால் வியாபார ரீதியாக அவர்களுக்குள் சச்சரவு எழுந்ததில்லை. இருப்பினும் வெள்ளையனுக்கு கருப்பனின் பணிவு, சமயோசித புத்தி, நாணயம் மற்றும் நட்புடன் பழகும் பாங்கு ஆகியவற்றால் கிடைத்த வாடிக்கையாளர்களின் கூட்டத்தைக் கண்டு பல சமயம் உள்ளுக்குள்ளேயே புழுங்கினான். அவனை ஏதோ ஓர் வகையில் தன்னிடம் கையேந்த வைப்பதன் மூலம், தான் அவனை விடப் பெரியவன் என்பதை நிரூபிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.அதற்கான தருணமும் வந்தது. ஒரு நாள் இருவரும் சேர்ந்து அருகில் உள்ள ஊரின் சந்தையில் சென்று பொருட்கள் வாங்கி வரலாம் என முடிவு செய்தனர். காட்டு வழிப் பயணம் என்பதால் ஒருவருக்கொருவர் துணையாகவும், நெடிய பயணம் என்பதால் களைப்பு தெரியாமல் இருக்க உரையாடிக் கொண்டு செல்லவும், பாதுகாப்பு கருதியும் இவ்வாறு இருவராகவோ அல்லது குழுவாகவோ செல்வது அப்பொழுது இயல்பு. இருவரும் சந்தையினை அடைந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை சேகரித்தனர். அன்று முழுவதும் இருவருக்கும் ஆன உணவு மற்றும் இதர சில்லரைச் செலவுகளை கருப்பனே ஏற்றுக் கொண்டான். வெள்ளையனோ ஒரு பேச்சிற்குக் கூட தான் தருகிறேன் என்று வாய் திறக்கவில்லை. கருப்பனும் அதனைப் பெரிதாக எண்ணவில்லை. மாலை இருவரும் தங்களின் அறிவூருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். கருப்பனோ தன்னிடம் இருந்த சொற்ப்ப் பணத்திற்கும் முன்பசிக்கு ஏதாவது வாங்கலாம் என முடிவு செய்தான். அதற்குமுன் வெள்ளையனிடமும் அவனுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டான். அவனோ தற்பொழுது தேவையில்லை என்றான். ஆகையால் கருப்பன் ஒருபுறம் சென்று, அந்த பணத்திற்குக் கிடைத்த சப்போட்டா பழங்களை வாங்கிக் கொண்டான். சில பழங்களை தன் நண்பன் வெள்ளையனுக்கென்று எடுத்து வைத்துவிட்டு மீதிப் பழங்களைத் தான் உண்ண ஆரம்பித்தான். அருகில் குப்பைத்தொட்டி ஏதும் இல்லாததால் சாப்பிட்டு முடித்தபின் எஞ்சிய விதைகளை, பின்னர் செல்லும் வழியில் எங்காவது தென்படும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம் என்றுஒரு காகிதத்தில் சுற்றி வைத்துக் கொண்டான். வெள்ளையனை சந்திக்கும் முன் வழியில் ஒரு வயதானவர் பசியால் வாட இருந்த பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டான். இப்பொழுது வெள்ளையனிடம் மட்டுமே பணம் இருந்தது. எனவே ஊர் திரும்பும் பயணத்தின்போது தேவைப்படும் உணவு மற்றும் நீரை, வெள்ளையன் தானே வாங்கினான். பின்பு இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவும் ஆனது. பசியுணர்வும் தோன்றியது. சிறிது தூரம் நடந்தபின் ஒரு சத்திரத்தை அடைந்தனர். அருகில் ஓடிய ஆற்றில் தங்கள் முகம், கை, கால்களைக் கழுவி முடித்தபின் இருவரும் சாப்பிட ஆயத்தமானார்கள். ஆனால், வெள்ளையனோ இந்த உணவுப்பொருட்கள் எல்லாம் தன்னுடைய பணத்தில் வாங்கியது என்றும், அதனால் அவை தனக்கு மட்டுமே உரியவை என்றும் தன் விளையாட்டை ஆரம்பித்தான். கருப்பனுக்கோ பசி ஒரு புறமும், இப்படியான புத்தி கொண்ட தன் நண்பனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தன. எனவே அவன் ஒரு சாமர்த்தியமான உத்தியைக் கையாண்டான். வழியில் எங்காவது தென்படும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடலாம் என்று வைத்திருந்த அந்த சீத்தாப்பழ விதைகளில் இரண்டை எடுத்து, வாயில் இட்டு சுவைக்க ஆரம்பித்தான். இவனின் இந்த வித்தியாசமான கெயலை எதிர்பார்க்காத வெள்ளையன் ஆர்வ மிகுதியால் அது என்ன என்று விசாரித்தான். அதற்கு கருப்பனோ, இது அபூர்வமான மரத்தின் விதை என்றும், கிடைத்தற்கரிய இவ்விதையினை ஒரு வயதான பெண் தான் அதற்குப் பசி நீங்க உணவளித்ததால் மனமகிழ்ந்து கொடுத்ததாக்க் கூறினான். மேலும் இவ்விதையால் அறிவு பெருகும் எனவும் அந்தப் பெண் கூறி மறைந்துவிட்டதாகக் கூறினான். பேராசை கொண்ட வெள்ளையனோ தனக்கும் அந்த விதைகளைத் தருமாறு கேட்டான். அதற்கு கருப்பனோ, அப்படியானால் அதற்குப் பதிலாக இருபது ரூபாய் பணம் வேண்டும் அல்லது அதற்கு சமமான மதிப்பு கொண்ட உணவுப் பொருளும் தரலாம் என்றான். மதியிழந்த வெள்ளையனோ, கருப்பன் எதிர்பார்த்தவாறே சிறிது யோசித்துவிட்டுப்பின் இரண்டு உணவுப்பொட்டலங்களைக் கொடுத்தான். அதற்குப் பதிலாய் கருப்பன் இரண்டு விதைகளைக் கொடுத்தான். கருப்பனும், தன் வாயிலுள்ள விதைகளை வெளியே உமிழ்ந்துவிட்டு உணவை உண்ண ஆரம்பித்தான். ஆர்வத்தில் தான் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டு அந்த விதைகளை வாயில் போட்டு சுவைத்தவன், எதுவும் நிகழாததால் தான் ஏமாற்றப்பட்டதையும், அது சாதாரண சீத்தாப்பழ விதை என்பதையும் உணர்ந்து, கருப்பனைத் திட்ட ஆரம்பித்தான். அவன் தனக்கு சாதாரண சப்போட்டா பழ விதைகளையே தந்துள்ளதாகவும், அதனை அறிவு தரும் விதைகள் என தன்னை ஏமாற்றியதாகவும் ஏசினான். அதனை உண்டதால் தனக்கு ஆச்சரியமாக எதுவும் நிகழவில்லை என்றும் இதற்கு தான் தந்த விலைக்கு தன்னால் நான்கு சப்போட்டா பழங்களையே வாங்கமுடியும் என்றும் கோபமாகப் பேச ஆரம்பித்தான். இந்த ஏமாற்று வேலைக்கு கருப்பனுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தருவேன் என்றும் பிதற்றலானான். இதை எல்லாம் கேட்டுக் கொண்டே அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்த கருப்பனோ, தான் அவனை ஏமாற்றவில்லை என்றும் தான் தந்த விதைகளை உண்டதால்தான் அவனுக்கு அறிவு பெருகியுள்ளது என்றான். ஏனென்றால் இதற்கு முன் இரு விதைகளுக்கு இருபது ரூபாய் விலை கொடுத்தவன் இப்போது அதற்கு நான்கு பழங்களையே வாங்கிவிடலாம் என்று யோசிக்கின்றான் இல்லையா. எனவே தான் சொன்னது உண்மைதான் என்றான். கருப்பனின் அறிவாற்றலை வியந்த வெள்ளையன் தன் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான்.